Home » மருத்துவம் & சுகாதாரம் » தோலைப் பாதுகாக்கும் திராட்சை

தோலைப் பாதுகாக்கும் திராட்சை

கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்குச் சூரியத்திரை (சன்ஸ்கிரீன்) களிம்புகளைப் பலர்...

👤 Sivasankaran1 May 2021 5:30 AM GMT
தோலைப் பாதுகாக்கும் திராட்சை
Share Post

கோடை வெயிலின் உக்கிரத்தில் இருந்து சருமத்தை காப்பதற்குச் சூரியத்திரை (சன்ஸ்கிரீன்) களிம்புகளைப் பலர் பயன்படுத்துகிறார்கள். அதில் வேதிக கலப்பு இருக்கிறது.

ஆனால் தற்போதைய ஆய்வின்படி, திராட்சை. இயற்கைச் சூரியத்திரையாக அமைந்திருக்கிறது. இந்த ஆய்வில், புற ஊதாக்கதிர் வீச்சுகளில் இருந்து தோலைப் பாதுகாப்பதற்குத் திராட்சை உதவும் என்பது தெரியவந்துள்ளது.

பெரும்பாலும் திராட்சை மதுத் தயாரிப்புக்குத்தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. திராட்சையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கனிமங்கள், உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

திராட்சையில் உள்ள உயிர்ச்சத்துக்கள் ஆற்றல்மிக்க சூரியத்திரை (சன்ஸ்கிரீன்) போன்று செயல்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாப்பதோடு சருமத்தில் இளமைத் தோற்றத்தை தக்கவைக்கவும் பயன்படுவதாக ஆய்வு கூறுகிறது.

இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், திராட்சையில் இயற்கையான பாலிபினால்கள் அதிகம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அது சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு, பர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருக்கிறது.

திராட்சையில் உள்ள பொருட்கள் புற ஊதா கதிர்கள் உமிழும் ஒளி சேதத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்குமா? என்பதை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இறுதியில் திராட்சை பழத்தை உட்கொள்வதன் மூலம் புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும் வெளிப்புற சரும சேதத்தை குறைக்க முடியும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி கிரேய்க் எல்மெட்ஸ் கூறுகையில் ''திராட்சையில் ஒரு குறிப்பிடத்தக்க ஒளிச்சேர்க்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். மேலும் அதில் தோலுக்கு நன்மை சேர்க்கும் பலவிதமான மூலக்கூறுகள் இருப்பதையும் அடையாளம் கண்டிருக்கிறோம். திராட்சை நம்மால் உண்ணக்கூடிய சூரியத்திரையாக செயல்படும். எனவே சூரிய கதிர்களால் ஏற்படும் சருமச் சேதம் உள்ளிட்ட பல உடலியல் பிரச்சினைகளுக்கு திராட்சை பயனுள்ளதாக அமையும். அதனால் ஆரோக்கியத்தை விரும்புகிறவர்கள் திராட்சையை உண்ணலாம்'' என்கிறார்.