குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
ஆண்களின் விந்தணு நீந்தும் வேகத்தினை கட்டுப்படுத்த உதவும் மருந்து பொருளை ஆய்வாளர்கள் வெற்றிகரமுடன் பரிசோதனை செய்துள்ளனர்.
👤 Saravana Rajendran26 April 2018 2:30 PM GMT
அமெரிக்காவில் ஓரிகான் நகரில் தேசிய உயர் விலங்கின ஆய்வு மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள ஆய்வாளர்கள் ஆண்களில் குழந்தை பிறப்பினை கட்டுப்படுத்துவதற்கு என மருந்து பொருள் ஒன்றை கண்டறிந்தனர். இதற்கு இபி055 என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
அதன்பின்னர் இந்த மருந்து பொருள் மக்காக் என்ற குரங்கு வகைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில் விந்தணுவின் மேற்பரப்பில் உள்ள புரதம் ஒன்றின் மீது இந்த மருந்து பொருள் செயல்பட்டது தெரிய வந்தது. இந்த புரதம் விந்தணு நீந்துவதற்கு உதவும் ஒன்றாகும்.
இந்த மருந்தின் செயலால் விந்தணு வேகமுடன் நீந்தும் தன்மை குறைகிறது. இதனால் அது கருவுக்குள் செல்லும் ஆற்றல் குறைகிறது. இனப் பெருக்க ஆற்றலை கட்டுப்படுத்துகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
குழந்தை பிறப்பினை கட்டுப்படுத்துவதற்கு ஆண்களுக்கு என இதுவரை காண்டம்கள் பயன்படுத்துவது மற்றும் வாசெக்டமி எனப்படும் அறுவை சிகிச்சை முறை ஆகிய 2 முறைகளே உள்ளன.
குழந்தை பிறப்பு கட்டுப்படுத்துதலுக்காக இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட பிற மருந்து பொருட்கள் விந்தணு உற் பத்தியை பாதிக்கும் வகையில் உள்ளன. அவை பெண்களுக்கான மருந்துகளை போன்றே ஆண்களுக்கும் ஹார்மோன் பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன.
ஆண்களில் 50 சதவீதத்தினருக்கு அக்னே என்னும் தோல் சார்ந்த வியாதிகளையும், 5இல் ஒரு பங்கினர் மனக்குழப்பம் மற்றும் 5 சதவீதத்தினர் மருந்து எடுத்து ஒரு வருடத்திற்கு பின் விந்தணு எண்ணிக்கையை திரும்ப பெற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், குரங்குகளில் இபி055 என்ற இந்த மருந்தினை கொடுத்து ஆய்வு செய்ததில் அவை 18 நாட்கள் கழிந்தபின் முழு அளவில் பழைய நிலைக்கு திரும்பியிருந்தன என்பது தெரிய வந்துள்ளது.
ஆய்விற்குள்ளான அனைத்து குரங்குகளுக்கும் இதனால் எந்த நீண்டகால விளைவுகளும் ஏற்படவில்லை என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பினால் மனிதர்களில் குழந்தை பிறப்பு கட்டுப்படுத்துவதற்கு என 10 ஆண்டுகளில் பாதுகாப்பு நிறைந்த மருந்து கிடைப்பதற்கு வழியேற்படும்
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire