குரங்கணி தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
👤 Saravana Rajendran3 April 2018 7:02 AM GMT

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி சிக்கி சம்பவ இடத்திலேயே 9 பேர் இறந்தனர். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் மதுரையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா (25), சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நிஷா (30), ஈரோடு கவுண்டம்பாடியைச் சேர்ந்த கண்ணன் (26), சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி (26), ஈரோடு கவுண்டம்பாடியைச் சேர்ந்த திவ்யா (25) மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
திருப்பூர் தேக்கம்பாளையத்தைச் சேர்ந்த சக்திகலா (40), பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் (29), ஈரோடு, சித்தோடைச் சேர்ந்த சதீஷ்குமார் (29), ஆகியோர் மதுரை எல்லீஸ்நகரிலுள்ள கென்னட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (32) மார்ச் 22-ல் உயிரிழந்தார்.
மதுரையிலுள்ள எல்லீஸ்நகர் கென்னட் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் எம்.கே.சாலையைச் சேர்ந்த சாய்வசுமதி (26), மதுரையிலுள்ள அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நிவ்யா நிக்ருதி (24) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரம் கற்பகம் அவென்யூவைச் சேர்ந்த பார்கவி (23) சென்னை அப்போலோவில் உயிரிழந்தார். இந்நிலையில், 53 சதவிகித தீக்காயங்களோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரி (25), சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த முருகபூபதியின் மகளாவார். தற்போது குரங்கணி தீ விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வந்த குரங்கணி சிறப்பு தீ விபத்து சிகிச்சைக்காயப் பிரிவு மூடப்பட்டது. இதையடுத்து மதுரையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மினு ஜார்ஜ் (32) என்பவர் 35 சதவிகித தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire