மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லை - கனடா பிரதமர் குற்றச்சாட்டு
கனடா , ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) கனேடிய நகராட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துக்...

கனடா , ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) கனேடிய நகராட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர், நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் உட்கட்டுமானத் திட்டங்களில் மாநிலங்கள் ஒத்துழைப்பினை சரியாக வழங்குவதில்லை என்றார்.
குறிப்பாக நகரங்களுக்கான முக்கிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கும்போது சில மாநிலங்கள் சவால்களை ஏற்படுத்தி வருகின்றன என அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உட்கட்டுமானம் போன்ற திட்டங்களில் முதலிட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த தமது நோக்கங்களுடன் அனைத்து மாநிலங்களும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. மேலும், குறுகியகால வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், நீண்டகால வளர்ச்சிக்கும் இவ்வாறான பெருநகரங்களின் உட்கட்டுமான முதலீடுகள் முக்கியமானவை என்பதே தனது நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்தார்.
எதிர்வரும் 12 ஆண்டுகளில் 185 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியைச் செலவிடுவதற்கு லிபரல் அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், மிகவும் வேகம் குறைந்த அளவிலேயே மத்திய அரசின் நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக பிரதமர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.