Home » உலகச் செய்திகள் » புதிய அரசாங்கத்தை உருவாக்க தேசப்பற்றுடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - ஜனாதிபதி

புதிய அரசாங்கத்தை உருவாக்க தேசப்பற்றுடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - ஜனாதிபதி

நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு தகுந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைவரும் தத்தமது மனச்சாட்சியிடம் கேள்வியெழுப்ப வேண்டும்,

👤 Sivasankaran17 Feb 2019 4:56 PM GMT
புதிய அரசாங்கத்தை உருவாக்க தேசப்பற்றுடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும் - ஜனாதிபதி
Share Post

நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய அரசாங்கமொன்றையும் புதிய வேலைத்திட்டமொன்றையும் புதிய தேசிய சக்தியொன்றையும் உருவாக்குவதற்கு முற்போக்காளர்களும் தேசப்பற்றுடையவர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

இன்று (17) முற்பகல் கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் 22ஆவது வருடாந்த பொதுச்சபை கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்றும் அந்த அரசாங்கத்தை பிரிவினைவாத வலதுசாரி சக்திகளிடம் கையளிக்காது, நாட்டை நேசிக்கின்ற, நாட்டினுள் காணப்படும் பிரச்சினைகளை கண்டறிந்து எதிர்கால சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு தகுந்த அரசாங்கத்தை அமைப்பதற்காக அனைவரும் தத்தமது மனச்சாட்சியிடம் கேள்வியெழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், தற்போது ஐக்கிய தேசிய கட்சியை அக்கட்சியின் தலைமைத்துவம் இயக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருப்பதை தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது என்றும் தெரிவித்தார்.

நாடு முகங்கொடுத்திருக்கும் பாரிய கடன் சுமையிலிருந்து நாட்டை விடுவிப்பதுடன், நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கும் நாட்டை நேசிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்று திரள வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக பாரிய அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க அரசியல் கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணியின் பயணத்தையும் ஜனாதிபதி அவர்கள் நினைவுகூர்ந்தார்.

சங்கைக்குரிய எல்லே குணவங்ச தேரர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷ, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ் கட்சியின் பிரதான செயலாளர் டி.வி.குணசேகர உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.