லிபரல் அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி - கருத்துக்கணிப்பின் முடிவு
கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய லிபரல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனடா மோசமான செயற்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளதாக, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் பெரும்பாலோர் தெரிவித்தனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்தின் ஆட்சி மீது பெரும்பாலான மக்கள், கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இணையம் ஊடாக கடந்த 15ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரையில், எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட, வாக்களிக்கத் தகுதி உள்ள 1,500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் புதிய லிபரல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கனடா மோசமான செயற்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளதாக, கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆட்சியில் நாடு திறம்படச் செயற்படுவதாக 22 சதவீதம் பேரும், பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை – முன்னர் இருந்ததைப் போலவே உள்ளது என்று 27 சதவீதம் பேரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ், கனடா திறம்படச் செயற்படவில்லை என குறிப்பிட்டுள்ள கருத்துக் கணிப்பை மேற்கொண்ட நிறுவனம், இவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது என்ற எண்ணப்பாட்டினை கனேடியர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.