Home » உலகச் செய்திகள் » மலையக மக்களுக்கு சாராயம் வழங்கப்போவதில்லை; வீடுகள் கொடுப்போம் - ரணில்

மலையக மக்களுக்கு சாராயம் வழங்கப்போவதில்லை; வீடுகள் கொடுப்போம் - ரணில்

எமது அரசாங்கத்தில் 25,000 வீடுகளை இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம். மீண்டும் சொல்கிறேன். சாராயம் இல்லை. வீடுகள் உண்டு என்று.

👤 Sivasankaran24 Feb 2019 5:21 PM GMT
மலையக மக்களுக்கு சாராயம் வழங்கப்போவதில்லை; வீடுகள் கொடுப்போம் - ரணில்
Share Post

மலையகமெங்கும் தோட்ட பகுதிகளின் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் பாராளுமன்றத்தில் உரிமை போராட்டத்தை நிகழ்த்தி அதற்கான நிதிகளையும் பெற்று மலையக மக்களின் அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புகழராம் சூட்டினார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய "வீ.கே.வெள்ளையன் புரம்" புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று (24) இடம்பெற்றது.

இதற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசியதாவது, மலையக மக்களுக்கு அபிவிருத்திகளை மேற்கொள்ள சாராயம் வழங்கப்போவதில்லை என்று அன்று தெரிவித்த நான் வீடுகளை கொடுப்பேன் என்று தெரிவித்தேன்.

அதேபோல எமது அரசாங்கத்தில் 25,000 வீடுகளை இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம். மீண்டும் சொல்கிறேன். சாராயம் இல்லை. வீடுகள் உண்டு என்று.

இந்த நாட்டில் மலையக பிரதேசங்களில் வாழ்கின்ற தொழிலாளர் மக்கள் இலங்கையர் என்ற ரீதியில் பூரண பிரஜையாக வாழ வேண்டும். அதை பெயருக்காக மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஒரு பெயர் பலகையாக இருக்கவும் கூடாது.

எனவே கல்வி, சுகாதாரம் உட்பட இலங்கையில் எவ்விடத்திற்கு சென்றாலும் தொழில் கிடைக்கும் உரிமையும், பிரஜை என்ற அந்தஸ்த்திற்கு தேவை என்ற அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும். எல்லாவற்றிருக்கும் மேலாக ஏனைய மக்களுக்கு உள்ளது போல காணிகள், கிராமம் ஆகியவையும் இருக்க வேண்டும். நான் கல்வி அமைச்சராக இருக்கும் பொழுது தோட்ட பாடசாலைகள் மற்றும் தோட்ட மருந்துசாலைகள் இருந்தது. தனி வீடுகள் இருக்கவில்லை.

அன்று நிதி கேட்கப்பட்டது. லயன்களை சீரமைக்க மாத்திரம். ஆனால் அணைவரும் தோட்டத்தில் மாத்திரம் தொழில் செய்தார்கள். பிரதேச சபை, பிரதேச செயலகம், நீதிமன்றங்களுக்கு செல்லும் உரிமை இம்மக்களுக்கு இருக்கவில்லை.

எனவே உண்மையான பிரஜைகளாக வாழ வேண்டும் என்றால். ஏனைய மக்களை போல் உரிமைகளும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

இதை நான் பிரதமராகுவதற்கு முன்பே சொல்லியிருந்தேன். நடைமுறைப்படுத்த காலம் போதாமல் இருந்தது. ஏனையவர்களும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

மாறாக மலையக மக்களை முட்டாளாக்கி செயற்பட்டனர். இதை நாம் இப்போது மாற்றியுள்ளோம். 7 பேர்ச் காணிகளில் வீடுகளை கட்டியமைக்கின்றனர்.

இந்திய அரசாங்கததிற்கும் நன்றி கூற வேண்டும். இவ் வீடுகளுக்கு செல்லும் பாதைகள் குடிநீர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசு மேற்கொள்கின்றது. இது உங்கள் கிராமம் பரம்பரையாக வாழலாம். எதிர்வரும் காலத்தில் மேல் மாடி கட்டியும் வாழ முடியும். இவ்வாறே கிராமம் உருவாகுகின்றது.