
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்திற்கு நல்ல முறையில் முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது. இது மாற்றமடைந்த இந்தியா. இந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும், எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்றார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக இம்ரான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்குதல் தொடர்பான உளவுத்துறை ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். பிரதமர் மோடி அமைதிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
பிப்ரவர் 19 ம் தேதி இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில், புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரத்தை இந்தியா கொடுத்தால் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். அதே சமயம், இந்த தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவை அவர் எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.