தீவிரவாதத்தை ஒழித்திட இலங்கையுடன் கைகோர்க்க தயார் - மோடி
கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் 310க்கும்...

கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களினால் 310க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாரென இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மோடி இவ்வாறு உறுதியளித்ததாக கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, இச்சம்பவங்களை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி உரையாற்றியுள்ளார்.
இதன்போது தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பை வழங்குவேன் எனவும் அவர் உறுதியளித்தார்.