தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 தற்கொலை குண்டுதாரிகள் இதுவரையில் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில் அவற்றுள் பெண்ணொருவர் உள்ளடங்குகின்றார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரிடம் பேசிய அவர், "நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புபட்டுள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது.
புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றன.
ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியே ஏனைய இடங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களின் தலைவராவார். அத்தோடு இவர் லண்டனில் பட்டத்தாரி பட்டத்தினையும், அவுஸ்திரேலியாவில் முதுமானிப்பட்டத்தினையும் பெற்றவர் என்பதோடு வசதி படைத்தவராவார்.
இவர் தொடர்பான ஏனைய தகவல்களை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதுள்ளது. இது தொடர்பான துரித விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என்றும் கூறினார்.