மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதி - ஐ.நா.சபை அறிவிப்பு
இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.

காஷ்மீர் - புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 திகதி ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உள்பட 22 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தி இருந்தது.
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முன்னர் இந்தியா முன்வைத்த கோரிக்கையை சீனா தனது வீட்டோ உரிமையால் நிராகரித்தது.
உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.சபை இன்று அறிவித்துள்ளது.