பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைத்து நாடுகளும் கைகோர்க்க வேண்டும் - ஜனாதிபதி
நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சமய தீவிரவாதத்தினால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (மே, 15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் தலைமையில் இன்று முற்பகல் பீஜிங் நகரில் ஆரம்பமானதுடன், அம்மாநாட்டில் விசேட விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
ஒரு நாகரிகத்தை மற்றுமொரு நாகரிகத்தினால் அடிமைப்படுத்த முடியாது என்றும் நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சட்டத்தினால் அல்லது சர்வதேச கட்டளையினால் அடிமைப்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் நாகரிகம் 2600 வருடங்களுக்கு மேற்பட்ட பௌத்த நாகரிகத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலேயர், பறங்கியர் ஆகிய இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.