சிங்களவர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள் - பிராம்டன் மேயர்
ஐக்கிய நாடுகள் சபையே இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது.

சிங்களவர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள் தான் என கனடாவின் பிராம்டன் மேயரான பேட்ரிக் ப்ரவுண் தெரிவித்துள்ளார்.
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், 'இலங்கை சமூகத்தினருக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், சிங்களவர்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள்தான்.
அவர்களது நாட்டின் ஜனாதிபதி இழைத்த போர்க்குற்றங்களுக்கு சிங்களவர்களை யாரும் குற்றம் கூறவும் இல்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையே இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளது.
2009இல் இலங்கையின் உயர் ஸ்தானிகராலயம், அங்கு ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல நடித்ததை போல, அவர்களால் கனடாவின் வெளியுறவு விவகாரத்துறையையும் ஏமாற்ற முடியாது, ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்ற முடியாது.
இப்போது இலங்கை தமிழர் இனப்படுகொலையின் 10ஆவது ஆண்டு நினைவு நாளை நாங்கள் நினைவுகூறுவதை அவர்கள் தடுக்க முயலும்போது அவர்கள் சொல்வதை நம்பி, நாங்கள் ஏமாறப்போவதில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.