மோடி சரளமாக ஆங்கிலம் பேசுகிறார் - டிரம்ப் புகழாரம்
மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்குத்தான் விருப்பம் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் பியாரிட்ஸ் நகரில் இடம்பெற்றுவரும் G7 மாநாட்டின் இரண்டு அரச தலைவர்களும் சந்தித்துக் கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.
G7 மாநாட்டின் பின்னர் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
பின்னர் இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார். முன்னதாக இரு தலைவர்களும் தனியே கருத்து பறிமாறிக் கொள்வதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து டிரம்ப் பேசுகையில், 'பிரதமர் மோடி என்னுடன் நன்றாக ஆங்கிலத்தின் பேசினார். ஆனால் ஆங்கிலம் பேசுவதில் அவருக்கு விருப்பம்தான் இல்லை' என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதைக்கேட்ட அனைவரும் சிரித்தனர்.
மோடியும், டிரம்பும் அவர்களுடன் இணைந்து சிரித்தனர். பின்னர் நட்பு ரீதியாக கைகளை குலுக்கி கொண்டனர்.