ஸ்கார்பரோ நகர கொள்ளைச் சம்பவம் - சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் முயற்சி
அந்த இளைஞர் அவர்களிடமிருந்து விடுபட்டு TTC பேருந்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் ரொறன்ரோ பொலிசார் கடந்த மாதம் ஸ்கார்பரோ நகர மையத்தில் இடம்பெற்ற இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலை 6 மணியளவில் ஒரு வர்த்தக வளாக வாகன நிறுத்துமிடத்தில் முதல் சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்களுடன் சிறப்பு அங்காடிக்குச் சென்றிருந்த 19 வயதான இளைஞர் ஒருவர் தனது காரில் ஏறுவதற்குச் சென்றபோது, சந்தேகநபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தை காண்பித்து இளைஞரை அச்சுறுத்தியுள்ளார். அந்த 19 வயது மதிக்கத்தக்க இளைஞருக்கு சொந்தமான பொருட்களை தரும்படி சந்தேகநபர்கள் மிரட்டியதுடன், பின்னர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.
சில நிமிடங்களின் பின்னர் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள T. T. C பேருந்து நிலைய வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, இரண்டு சந்தேகநபர்கள் முகங்களை மூடிக்கொண்டு அவரை அணுகி அச்சுறுத்தியுள்ளனர். சந்தேகநபர்கள் இளைஞரை பிடித்து மேலங்கியை கழற்றி தருமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அந்த இளைஞர் அவர்களிடமிருந்து விடுபட்டு TTC பேருந்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட இந்தக் கொள்ளை தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை புலனாய்வாளர்கள் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.