கனடாவில் நள்ளிரவில் தாயும், 2 பிள்ளைகளும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோவில் உள்ள இம்பீரியல் அவன்யூ பகுதி வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவு பொலிஸாருக்கு அவசர அழைப்பொன்று வந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கண்டனர்.
அவரை பொலிசார் மீட்ட நிலையில் அங்கு அவரின் மனைவி கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததை அவதானித்துள்ளனர். பொலிஸார் அந்த பெண்ணை துப்பாக்கியை கீழே போட்டு விடுமாறு கூறிய போதும் திடீரென துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார்.
மேலும் அவரின் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனிடையே பொலிஸார் தான் மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகச் செய்தி பரவியது.
இதை பொலிஸார் வன்மையாக மறுத்துள்ளனர். குறித்த பெண் பிள்ளைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பிலான ஏனைய விவரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை. உயிரிழந்த பெண் நன்னடத்தை பிரிவு அதிகாரி என்பது விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.