ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிரேட்டர் சிட்னி, புளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சக் கூடாது; 2 வாளி தண்ணீர் கொண்டுதான் வாகனங்களை கழுவ வேண்டும்; நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்ப சிறப்பு அனுமதி பெற வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகளை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டாலர்கள் வரையும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலர்கள் வரையும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, அங்கு கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீ பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் 100 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு காட்டுத்தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். காட்டுத்தீ காரணமாக நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 7 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.