மிருசுவில் படுகொலை - குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை வெள்ளை வேனில் வந்த...

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள், அச்சுறுத்தும் வகையில் விவரங்களைச் சேகரித்துள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
மிருசுவில் பகுதியில், 2000ஆம் ஆண்டு, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட ஒருவரைத் தேடி, வெள்ளை வாகனமொன்றில் வந்த நால்வர், அவரிடம் விசாரணை நடத்தியதாகவும் அதேபோல, கடந்த 11ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், படுகொலை நடந்த இடம், குடும்பத்தில் இறந்தவர்கள் யார் போன்ற தகவல்களை விசாரித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய், சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்திக்குப் பின்னரே இவ்வாறு நடந்துள்ளதாக தெரியவருகின்றது.