கொரோனா வைரஸ் - இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,360ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 360 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொடிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,360ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இதனால் உலகம் முழுவதும் 77 ஆயிரத்து 672 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆயிரத்து 71 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கொரியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 400 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுத்திட, பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், தென்கொரிய அரசு தடை விதித்திருக்கிறது.
அங்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால் தென் கொரிய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மேலும் சீனாவில் நோய் தொற்றினைக் குறைக்க பல்வேறு நகரங்களில் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வரும் நிலையில், மருந்தில் உள்ள நச்சுத் தன்மை காரணமாக பறவைகள் மற்றும் சில உயிரினங்கள் பலியாகி வருவது சீனாவில் புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.