நீதிபதி பணியிட மாறுதல்- மத்திய அரசு மறுப்பு
நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

பாஜகவினருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிட்டதால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
செவ்வாயன்று வடகிழக்கு டெல்லியில் வன்முறை தலைவிரித்தாடிய நிலையில், நள்ளிரவில் அது குறித்த அவசர வழக்கை, உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் தனது வீட்டில் விசாரித்தார்.
வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வன்முறை தொடர்பான படக் காட்சிகளைப் பார்வையிட்ட அவர், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யாத காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்ததுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக நீதிபதி முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இது நீதித்துறை மீதான பாஜக அரசின் தலையீடு எனக் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்தியச் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நீதிபதி பணியிட மாற்றத்துக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பிப்ரவரி 12ஆம் தேதி பரிந்துரைத்திருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.