கொரோனா வைரஸ் தொற்று- மீண்டும் சிறிலங்காவில் அனுமதிச்சீட்டு நடைமுறை வருகிறது
தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்குச் சட்டத்தை மீறியது தொடர்பாக இதுவரை 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகக் கடந்த 20 ஆம் திகதி முதல் இந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனுமதியின்றி வந்த 154 வாகனங்களைக் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோருக்கு மாத்திரம் வீதியில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகத்தர்கள் வீதியில் பயணிக்கும் போது தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும் எனவும் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.