ஊரடங்கு தளர்வு நிலையானதாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - டக்ளஸ் கோரிக்கை
நமது உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதுடன் எமது நாட்டிலிருந்து குறித்த நோய்த் தொற்றை முற்றாக இல்லாதொழிக்கவும் முடியும்.

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொது மக்களிடம் கோரியுள்ளார்.
இலங்கை கொரோனா வைரஸ் தாக்கத்தால் முடக்கப்பபட்டிருந்த நிலையில் நாளையதினம் மீளவும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்படவுள்ளமை குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், "கொரோனா தொற்றானது எமது மக்களை அச்சுறுத்திவந்திருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதாரத் தரப்பினர் முன்னெடுத்திருந்த சுகாதார நடைமுறைகள் காரணமாக நாளை இயல்பு நிலை திரும்பவுள்ளது.
அந்தவகையில், எதிர்வரும் காலங்களில் இத்தொற்று எம்மை நெருங்காதவகையில் நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தினதும் சுகாதாரத் துறையினரதும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடந்துகொண்டால் கொடிய நோயான கொரோனாவிலிருந்து நம்மையும் நமது உறவுகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதுடன் எமது நாட்டிலிருந்து குறித்த நோய்த் தொற்றை முற்றாக இல்லாதொழிக்கவும் முடியும்.
குறிப்பாக, நாளையதினம் வியாபார நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான சந்தைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தத்தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும் சுகாதாரத் தரப்பு அறிவித்துள்ள நடைமுறைகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதுடன் பொதுமக்களும் அத்தகைய கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதும் அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.