பாகிஸ்தான், சீனாவிடம் அதிக அணுஆயுதங்கள் - சர்வதேச அமைப்பு தகவல்
இந்த இரு நாடுகளும் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்துள்ளன.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு, ஆண்டுதோறும் அணு ஆயுத நிலவரம் தொடர்பாக தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக அளவில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 அணுஆயுத நாடுகள் உள்ளன. இந்த நாடுகளிடம் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400 ஆகும். இது, கடந்த ஜனவரி மாத நிலவரம் ஆகும்.
கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 13 ஆயிரத்து 865 அணு ஆயுதங்கள் இருந்தன. மிகவும் பழையதாகி விட்ட ஆயுதங்களை அமெரிக்காவும், ரஷியாவும் அழித்து விட்டதால், மொத்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலக அளவில், ரஷியா 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. இந்த இரு நாடுகளும் உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை வைத்துள்ளன.
இந்தியா, கடந்த ஆண்டு 140 அணு ஆயுதங்களை வைத்திருந்தது. ஓராண்டில் 10 அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனா, பாகிஸ்தானை விட இது குறைவுதான். சீனாவிடம் 320, பாகிஸ்தானிடம் 160 என்ற எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் உள்ளன.