Home » உலகச் செய்திகள் » கர்நாடகாவில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல்

கர்நாடகாவில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல்

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் குரங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதும் உறுதியான விஷயம்.

👤 Sivasankaran11 Jan 2019 6:48 AM GMT
கர்நாடகாவில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல்
Share Post

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் குரங்குக் காய்ச்சல் பரவி வருகிறது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதும் உறுதியான விஷயம். அவர்களுக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குரங்குக் காய்ச்சல் `கியாசானூர் ஃபாரெஸ்ட்' நோய் (Kyasanur Forest Disease) என்று பெயர் வந்தது. காலப்போக்கில் அது குரங்குக் காய்ச்சல் என்று பேச்சுவழக்கில் மாறியது. ஃப்ளேவிவிரிடே (Flaviviridae) என்ற வைரஸால் ஏற்படும் பாதிப்பு இது.

``ஃப்ளேவிவிரிடே வைரஸை தங்கள் உடலில் கொண்ட சில உண்ணிகள், விலங்குகளைக் கடிப்பதால் அவற்றுக்கு அந்த வைரஸ் கடத்தப்படும். ஃப்ளேவிவிரிடே வைரஸ் தாக்கிய விலங்குகளைக் கடிக்கும் பூச்சிகள், மனிதர்களைக் கடிக்க நேர்ந்தால் அந்த வைரஸ் மனிதர்களுக்குக் கடத்தப்பட்டு காய்ச்சல் ஏற்படும். பாதிக்கப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட விலங்குகள் மற்றும் மிகச் சமீபத்தில் இறந்த விலங்குகளிடம் இருந்துதான் பாதிப்பு அதிகமாகப் பரவும்.

விலங்குகளில் செம்மறி ஆடுகள், மாடுகள் போன்றவற்றிலிருந்தும் நோய் பரவும் என்றாலும், குரங்குதான் ஆபத்தானது. குரங்குகள்தான் இந்த வகை வைரஸால் எளிதில் பாதிக்கப்படும். வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் ரத்தத்தை உட்கொள்ளும் பூச்சியினங்கள், மனிதரைக் கடிக்கும்போது இந்த நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. எந்தச் சூழலிலும் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு இந்த நோய் பரவாது.

வைரஸ் தொற்றினால் ஏற்படும் காய்ச்சல் மூன்று முதல் எட்டு நாள்களுக்குள் பெரும்பாலானவர்களுக்கு தானாகவே சரியாகிவிடும். அதற்குப் பிறகும் காய்ச்சல் நீடித்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும். உடல் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்படையத் தொடங்கும். அதன் அறிகுறிகளாக, உடல் சில்லிடுவது, தலைவலி, அதிகமான காய்ச்சல், தீவிரமான தசைப்பிடிப்பு, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மனநலம் சார்ந்த பிரச்னைகள் போன்றவை ஏற்படும். டெங்குக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்தான் குரங்குக் காய்ச்சலுக்கும் காரணம் என்பதால், டெங்குவைப் போன்று பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும். உதாரணமாக, ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்களின் அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவது, உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு, இரைப்பைத் தொடர்பான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். பி.சி.ஆர் அல்லது ரத்தப் பரிசோதனை மூலமாகவே குரங்குக் காய்ச்சல் பரிசோதிக்கப்படும். எலிசா (ELISA) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படும்.

சிகிச்சை முறைகளைப் பொறுத்தவரையில், பாதிக்கப்பட்டுள்ள நோயாளியின் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுப்பது மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்தக்கசிவை சரிசெய்வது என நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சையே அளிக்கப்படும். காரணம், இதற்கெனத் தனி சிகிச்சை முறை கிடையாது.

சிலருக்கு, காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலே ஓரிரு நாள்களிலோ, வாரங்களிலோ சரியாகிவிடும். உடல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமாக இருந்தால் மட்டும், சில மாதங்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். தேசிய சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி, இறப்பு விகிதம் மூன்று முதல் பத்து சதவிகிதம்தான் என்பதால் மக்கள் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை. மருந்து மாத்திரைகளைச் சரியாக உட்கொண்டாலே போதுமானது. காய்ச்சலுடன், நரம்பு சார்ந்த பிரச்னைகள், தீவிர தலைவலி, மனநலப் பிரச்னைகள், பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பாதிப்பு தீவிரமாக உள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

நவம்பர் முதல் ஜனவரி மாதம்வரை தான் இந்தக் காய்ச்சல் அதிகமாகப் பரவும். எனவே வனப்பகுதியில் இருக்கும் மக்கள் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்திலாவது முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.