Home » உலகச் செய்திகள் » பொதுமக்களுக்கு கனடிய சுகாதாரத் திணைக்களத்தின் எச்சரிக்கை

பொதுமக்களுக்கு கனடிய சுகாதாரத் திணைக்களத்தின் எச்சரிக்கை

ஏ1 மூலிகை ஆயுர்வேத கிளினிக் லிமிட்டட்டின் மருந்துப் பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

👤 Sivasankaran29 Jan 2019 6:35 PM GMT
பொதுமக்களுக்கு கனடிய சுகாதாரத் திணைக்களத்தின் எச்சரிக்கை
Share Post

பிரிட்டிஷ் கொலம்பியாவை தளமாக கொண்டு செயற்படும் ஏ1 மூலிகை ஆயுர்வேத கிளினிக் லிமிட்டட்டின் மருந்துப் பொருட்கள் உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கனடிய சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மருந்துப் பொருட்கள் சிலவற்றில் ஈயம் மற்றும் பாதரசம் என்பன கலந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Surrey-யில் உள்ள அந்த நிறுவனத்தில் இருந்தும், பிரம்டனில் உள்ள அதன் துணை நிறுவனம் ஒன்றில் இருந்தும் அதிகாரிகள் மருந்துப் பொருட்களையும், அதனை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களையும், உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், சுகாதாரத் திணைக்களம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள எச்சரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

குறித்த அந்த நிறுவனத்தின் மருந்துப் பொருட்களை பயன்படுத்திய நோயாளி ஒருவரின் உடலில் வன் உலோக நச்சுப் பொருட்களின் தாக்கம் இருப்பதனை கண்டறிந்த பிரிட்டிஷ் கொலம்பிய நோய்கள் கட்டுப்பாட்டு நிறுவனம், கனடிய சுகாதார திணைக்களத்திற்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அந்த நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்டுவந்த மருந்துப் பொருட்கள், கனேடிய மத்திய அரசாங்கத்தின் அனுமதி பெறப்பட்டவை அலல எனவும், இவ்வாறான பொருட்களை விற்பது கனடாவில் சட்டவிரோதமானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த அந்த நிறுவனத்தின் எந்தவித பொருட்களையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அது மட்டும் அல்லாமல், அந்த நிறுவனத்தின் மருந்துப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், அவற்றை இனிமேல் பயன்படுத்தாமல், வீசிவிட்டு, உடனடியாக மருத்துவர் ஒருவரை நாடி தமது உடல்நலத்தினை பரிசோதித்துக் கொள்ளுமாறும் பெர்துமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.