Home » உலகச் செய்திகள் » ஜெப்ரி பெல்ட்மனுடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

ஜெப்ரி பெல்ட்மனுடன் இரா.சம்பந்தன் சந்திப்பு

தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார்.

👤 Sivasankaran18 March 2019 4:06 PM GMT
ஜெப்ரி பெல்ட்மனுடன் இரா.சம்பந்தன் சந்திப்பு
Share Post

ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கை வந்துள்ளார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது அக்டோபர் 26, 2018 அன்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவரும் செயற்பட்ட விதம் குறித்து தனது பாராட்டுக்களை ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.

அப்போது கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் எப்போதும் அரசியல் யாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தவர்கள் என்றும், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்படாமல் கொள்கைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றியவர்கள் என்றும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சபையானது உயர் பதவிகளுக்கு நபர்களை நியமிக்கின்ற போது மிகவும் அவதானத்துடன் செய்யப்பட்டமையானது அரசியல் யாப்பிற்கு முரணான சம்பவங்களை இந்த நாட்டின் உயர் நீதிமன்றங்கள் அனுமதிக்காமைக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், காணாமல் போனோருக்கான அலுவலகம், நஷ்ட ஈடு அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை மக்கள் மத்தியில் செயற்படுவது அவசியம் எனவும் அத்தகைய அலுவலகங்கள் உண்மையை நிலைநாட்டும் முகமாக தொடர்ச்சியாக மக்களோடு இடைப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைப்பது மாத்திரமல்லாது அரசாங்கமும் ஏனைய மக்களும் தங்களை குறித்து கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளும் முகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கமும் சில அரசியல்வாதிகளும் இதனை தமிழ் சிங்கள பிரச்சினையாக உருவாக்க முயற்சிப்பதாகவும் இது அத்தகைய பிரச்சினை அல்ல என்றும் மாறாக இது அடிப்படை மனித உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்ல வேண்டும் என முன்னாள் ஐநாவுக்கான அரசியல் துறை செயலாளர் நாயகத்தை இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.