Home » உலகச் செய்திகள் » மாலத்தீவு விவகாரம் உலக நாடுகள் உதவியைக் கேட்கும் நீதிபதிகள்

மாலத்தீவு விவகாரம் உலக நாடுகள் உதவியைக் கேட்கும் நீதிபதிகள்

அரசு நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக கூறி மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அப்துல்லா யாமீன் நேற்றிரவு அறிவித்தார். அதேபோல் அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காண, இந்தியா உள்ளிட்ட உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

👤 Saravana Rajendran6 Feb 2018 5:08 AM GMT
மாலத்தீவு விவகாரம் உலக நாடுகள் உதவியைக் கேட்கும் நீதிபதிகள்
Share Post

இந்தியப் பெருங்கடல் பகுதி யில் உள்ள மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முகமது நசீத் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி ஏற்றார். அதன்பிறகு, நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலை சதி உட்பட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதன்பின், உடல்நலக் குறைபாட்டை காரணம் காட்டி மாலத்தீவை விட்டு வெளியேறினார் நசீத். லண்டனில் சில காலம் தங்கியிருந்த நசீத், தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், நசீத் உட்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''9 பேரையும் விடுவிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்'' என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.
12 எம்.பி.க்கள் போர்க்கொடி
இதற்கிடையில், அதிபர் யாமீனின் 'மாலத்தீவு முன்னேற்றக் கட்சி'யைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பினர். அதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12 எம்.பி.க்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இதனால் அதிபர் யாமீனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 85 உறுப்பினர்களில் 12 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்பட்டால், அதிபர் யாமீன் பெரும்பான்மை இழப்பார். அத்துடன் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைத்து விடும். எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். மேலும், உத்தரவைத் திரும்ப பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் உத்தரவிட்டார். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.
இதையடுத்து அதிபர் யாமீனைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது கைது செய்யவோ உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டம் நேற்று கூடுவதாக இருந்தது.
அப்படி கூடினால் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் அதிருப்தி எம்.பி.க்கள் 12 பேரும் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கலாம் என்ற அச்சத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. மேலும், நேற்றிரவு திடீரென மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிபர் அலுவலக சட்ட விவகாரங்கள் துறை அமைச்சர் அசிமா ஷூகூர் நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''அரசு விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதால், நாட்டில் 15 நாட்களுக்கு அவசர நிலையை அதிபர் பிரகடனப்படுத்தி உள்ளார்'' என்றார். அப்போது அட்டர்னி ஜெனரல் முகமது அனில் உடன் இருந்தார்.
2 எம்.பி.க்கள் கைது
முன்னதாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து நசீம் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தி மீண்டும் அதிபராகிவிட அதிபர் யாமீன் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. அரசியல் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், ''பொய் குற்றச்சாட்டு சுமத்தி எங்களை பதவியில் இருந்து நீக்க அதிபர் யாமீன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மாலத்தீவில் சட்டத்தை நிலைநாட்டவும், அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காணவும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உதவ வேண்டும்'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீது உட்பட நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.
அதிபருக்கு ராணுவம் ஆதரவு
அதற்கேற்ப, ''உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மாட்டோம். அட்டர்னி ஜெனரல் முகமது அனில் என்ன கூறுகிறாரோ அதன்படி செயல்படுவோம்'' என்று ராணுவ தளபதி அகமது ஷியாமும் கூறிவிட்டார். இதனால் மாலத்தீவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags