மாகாணத் தேர்தல் இந்தாண்டு இல்லை - யாழில் ரில்வின் அறிவிப்பு
மிகுதியாகவுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் காணிகளை விடுவிப்பதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்தாண்டு வரவு –செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மீள்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட செயற்குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தயாராகவுள்ளோம். அதேநேரம் இந்த விடயத்தில் இந்தியாவிடமிருந்து எமக்கு எந்தவிதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யா யாழ்ப்பாணம்- அரியாலையில் 23-05-2026 அன்று மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலக திறப்பு விழாவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் புதிய மாவட்ட அலுவலகம் ஒன்றை திறந்து வைத்தோம். தேசிய மக்கள் சக்திக்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் யாழ் மக்களை ஒன்றிணைப்பதில் இந்த அலுவலகம் முக்கியமானதொன்றாக அமையும். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.எதிர்கால திட்டங்களை சிறந்த முறையில் செயற்படுத்தி நாட்டை முன்னேற்றுவோம். இனவாதத்துக்கு ஒருபோதும் இனி இடமளில்லை.
கேள்வி – பிரபாகரனின் உடல் வைக்கப்பட்ட இடத்தை அறிவேன், ஆனால் அதனை சொல்ல போவதில்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில் - அது தொடர்பில் எமக்கு ஏதும் தெரியாது.சரத் பொன்சேகா அரசாங்கத்தின் பிரதிநிதியல்ல, முன்னாள் இராணுவ தளபதி. அவர் அவ்வப்போது இவ்வாறான விடயங்களை குறிப்பிடுவார். நாங்கள் அதற்கு பொறுப்பேற்க முடியாது.ஆகவே அது தொடர்பில் எம்மால் தெளிவுப்படுத்த முடியாது.
கேள்வி – மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படுமா, தேர்தல் விடயத்தில் இந்தியா ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கிறதா ?
பதில் - மாகாணசபைத் தேர்தலுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் தித்வா புயல் தாக்கத்துக்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டது. அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. தேர்தலுக்கு ஒதுக்கிய நிதியும் நிவாரணமளிக்க செலவழிக்கப்பட்டது. ஆகவே இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது. மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த சிக்கலை ஏற்படுத்தினார். மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்பது பற்றி ஆராய்வதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற செயற்குழு அறிக்கை சமர்ப்பித்தால் அதற்கமைய அடுத்த ஆண்டு ஏதும் நெருக்கடிகள் ஏற்படாவிடின் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். மாகாணசபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை. இந்தியாவுடன் இராஜதந்திர மட்டத்தில் இணக்கமாகவே செயற்படுகிறோம்.
கேள்வி – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க காணி விடுவிப்பு பற்றி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அந்த வாக்குறுதி இன்றும் நிறைவேற்றப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தமது காணிகளை கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் ?
பதில் - ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கோணத்தில் இன்றி பார்த்தால் கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த பெரும்பாலான இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் காணிகளும், வீதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
மிகுதியாகவுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் காணிகளை விடுவிப்பதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் காணிகளை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம். ஒரு தரப்பினர் கலக்கமடைந்து போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். அவற்றை கவனத்திற் கொள்ளப்போவதில்லை.
வடக்கு மக்களின் நம்பிக்கையை வென்ற நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் தான் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார்.





