சிறிலங்காவின் பயண அழைப்பை ஏற்றார் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா
பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவர் சுமித் தசநாயக்க தனது உரையில், 2022 நவம்பரில் முதலாவது சுற்று அரசியல் ஆலோசனைகளை நடத்தியதிலிருந்து சிறிலங்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளதை எடுத்துரைத்தார்.
சிறிலங்காவுக்குப் பயணம் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி விடுத்த அழைப்பைப் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரேசிலிலுள்ள சிறிலங்கா தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சிறிலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற 76 ஆவது சுதந்திர தின வரவேற்பின் போது பிரேசில் வெளிவிவகார அமைச்சின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான செயலாளர் தூதுவர் எட்வர்டோ பயஸ் சபோயா இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி லூல டா சில்வா உரிய நேரத்தில் தனது சிறிலங்காவுக்கான அலுவல்பூர்வ பயணத்தை மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தூதுவர் சபோய்யா மேலும் தெரிவித்தார்.
2023 டிசம்பரில் சிஓபி28 இன் போது சிறிலங்கா மற்றும் பிரேசில் தலைவர்கள் துபாயில் நடத்திய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த அவர், 2024 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கும் என்றும் கூறினார்.
பிரேசிலுக்கான சிறிலங்காத் தூதுவர் சுமித் தசநாயக்க தனது உரையில், 2022 நவம்பரில் முதலாவது சுற்று அரசியல் ஆலோசனைகளை நடத்தியதிலிருந்து சிறிலங்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளதை எடுத்துரைத்தார். இதன் விளைவாக, சிறிலங்காயின் பாற்பண்ணை மற்றும் கரும்பு கைத்தொழில்களின் அபிவிருத்தி மற்றும் திறன் கட்டியெழுப்புவதற்காக பிரேசிலிய தொழில்நுட்ப உதவியை வழங்கும் நோக்கில் பிரேசிலில் இருந்து உயர்மட்ட தொழில்நுட்ப குழுவொன்று 2023 ஜூன் மாதத்தில் சிறிலங்காவுக்கு அலுவல்பூர்வப் பயணத்தை மேற்கொண்டது. தூதரகம் மற்றும் பிரேசிலியாவில் உள்ள பிரேசில் ஒத்துழைப்பு நிறுவனம் (ஏபிசி) ஆகியவற்றுக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது.