தான் ஜனாதிபதியானால் செல்வந்தர்கள் அதிக விலை கொடுப்பார்கள்: சஜித் பிரேமதாச
பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய ஒப்பந்தத்தில் "அடிப்படை மாற்றங்கள்" இருக்க வேண்டும்.

அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர், தான் ஆட்சிக்கு வந்தால், பணக்காரர்கள் அதிக வரி செலுத்துவதையும், ஏழைகள் தங்கள் நிலைமைகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்வதற்காகப் பன்னாட்டு நாணய நிதியத்துடன் 2022 பொருளாதார சீர்திருத்த தொகுப்பை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மக்கள் மீதான வரிச்சுமையை குறைப்பதற்கான வழிகளை கண்டறியப் பன்னாட்டு நாணய நிதியத்துடன் தனது கட்சி ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக சஜித் பிரேமதாச அசோசியேட்டட் பிரஸ்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மூன்றாவது பாதை, நடுத்தர பாதையில் பயணிக்கிறோம், செல்வம் உருவாக்கப்படும், நாடு வளரும் மற்றும் செல்வம் சமமாக விநியோகிக்கப்படும் பாதை" என்று சஜித் பிரேமதாச கூறினார்.
பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய ஒப்பந்தத்தில் "அடிப்படை மாற்றங்கள்" இருக்க வேண்டும். ஆனால் அவை மக்கள் மீதான சுமை குறைக்கப்படுவதை உறுதி செய்ய மிகவும் "மனிதாபிமான முறையில்" இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"சுமத்தப்பட வேண்டிய சுமைகள் இருந்தால், சிறிலங்காவின் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களை விட பெரும் செல்வந்தர்களும் செல்வந்தர்களும் சுமையில் ஒரு பெரிய பங்கை எடுக்க வேண்டும்."