SRH ரன் மழைக்கு முன்பு தமனின் இசை மழை
தமன் தலைமையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் திருவிழா நடந்து வருகின்றன. கடந்த 22ம் தேதி ஐபிஎல் தொடங்கிய நிலையில், தினமும் இரண்டு அணிகள் விளையாடி வருகின்றன. ஐபிஎல் தொடக்க நாளின்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாலிவுட் கிங் ஷாருக்கான் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், திஷா பதானி, வருண் தவான் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இதேபோல் ஐபிஎல் நடைபெறும் முக்கிய நகரங்களின் மைதானங்களில் தொடகக் விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 23ம் தேதி சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கு முன்னதாக நடந்த அனிருத்தின் இசை நிகழ்ச்சி சிஎஸ்கே ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இதேபோல் ஹைதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரபல இசையமைப்பாளர் தமனின் இசை நிகழ்ச்சி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் வரும் 27ம் தேதி ஹைதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக தான் தமனின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் தலைமையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாட உள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் தமன், ''நம்முடைய சொந்த கிரிக்கெட் மைதானத்தில் ஓஜி (OG), குண்டூர் காரம் (Guntur Kaaram) , டாகு மகாராஜ் (Daaku Maharaaj) மற்றும் கேம் சேஞ்சர் (Game Changer) ஆகிய திரைப்படங்களின் பாடல்களை பாட உள்ளோம். இசை நிகழ்ச்சியை காண தயாராக இருங்கள்'' என்று கூறியுள்ளார்.