அமெரிக்கா-இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றங்கள்

இலங்கை தேசத்தில் புதியதொரு ஆட்சி ஏற்பட்டிருக்கின்ற அதேவேளை, உலக வல்லரசான அமெரிக்காவிலும் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். இங்கு இலங்கையின் ஆட்சி மாற்றத்தை பார்க்கும்பொழுது ஆயுத-அடாவடி போராட்டத்தினூடாக அரசியலில் பேசுபொருளாக இருந்த ஒரு அமைப்பு இன்று இலங்கையின் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அமர்ந்திருக்கிறது என்று கூறுவதை விட சிங்கள மக்களின் பெரும்பகுதியினரால் அமர வைக்கப்பட்டிருக்கிறது. இது இலங்கையின் எதிர்காலத்துக்கு எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பதை ஓரிரு மாதங்களில் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். தேசிய மக்கள் சக்தி என தங்களை ஜனநாயகவாதிகள் போன்று காட்டி ஆட்சிக்கு வந்திருக்கும் ஜே.வி.பி.யின் கீழ்மட்ட உறுப்பினர்களுடைய செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும்? இந்த ஆட்சியாளர்களுடன் சர்வதேச நாடுகள் எவ்வாறு ஒத்துழைக்கும் போன்ற கேள்விகளுக்கு சில மாதங்களிலேயே விடை கிடைத்துவிடும். இந்த பின்னணியில் தான் பொது தேர்தல் ஒன்றுக்கு இலங்கை முகம்கொடுத்திருக்கிறது.
இந்த தேர்தல் இலங்கையின் சிங்கள மக்களுக்கு எந்தளவுக்கு முக்கியமோ அதைவிட, முக்கியம் ஈழத்தமிழர்களுக்கு. காரணம், இன்று ஆட்சியில் ஏறியிருக்கும் அரசாங்கம் தமிழர் விரோத அரசாங்கம். இலங்கையின் அனைத்து ஆட்சியாளர்களும் தமிழர் விரோத ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் சில விடயங்களில் ஆக்ரோஷமாக செயற்பட்டு ஒட்டுமொத்தமாக தமிழர்களை ஒதுக்கமாட்டார்கள். ஆனால், இன்று இருக்கின்ற ஜே.வி.பி.என்பது ஒட்டுமொத்த தமிழர் விரோத இயக்கம் என்பதை கடந்தகால வரலாறுகள் தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறது. வடக்கு-கிழக்கு இணைப்பை பிரித்தமை மற்றும் ஈழத்தமிழருக்கு சற்று ஆறுதலான நாடாக இருக்கும் இந்திய எதிர்ப்பு என ஒட்டுமொத்தமாக தமிழர் விரோத போக்கையே அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
இந்நிலையில் தமிழர் தேசத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாவோர் இந்த ஆட்சியாளர்களின் சவால்களை சமாளிக்கக்கூடியவர்களாகவும் இராஜதந்திர ரீதியில் தமிழர்களுடைய விவகாரங்களை கையாளக்கூடியவர்களாகவும் இருப்பது அவசியமாகும். இதுவரை காலமும் இலங்கையின் ஆட்சியாளர் கொடுத்த வளங்களை கௌவ்விக்கொண்டு தங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டு தமிழரை நடுத்தெருவில் கொண்டுவந்தவர்களை போன்ற தலைவர்களுக்கு சிறந்த பாடத்தை புகட்டவேண்டிய ஒரு தேவையும் ஈழத்தமிழருக்கு இருக்கிறது.
சிங்கள மக்கள் எவ்வாறு புதியதொரு ஆட்சியாளர்களை கொண்டுவர துணிந்தார்களோ அதேபோன்று தமிழர் தேசத்திலிருந்தும் படித்த-வீரம் நிறைந்த-இராஜதந்திரமுள்ள-மக்களையும் மக்களின் தேச விடுதலையையும் நேசிக்கும் தலைவர்களை மக்கள் இனம்கண்டு பாராளுமன்றத்துக்கு அனுப்புவது காலத்தின் கட்டாயம். இனியும் தவறுகளை செய்துகொண்டிருக்க முடியாது. காரணம், பூகோள அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் அவலம் என்பது 2009ஆம் ஆண்டில் இந்த நூற்றாணடின் மிகப்பெரிய இன அழிப்பு என கூறிக்கொண்டிருந்த காலம் போய், காஸாவிலும் உக்ரைனிலும் பல மனித அழிவுகள் அரங்கேற தொடங்கியிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் சர்வதேச அரங்கிலிருந்து மங்கிப்போய் கொண்டிருக்கிறது. ஆகவே அதற்கான நீதியை பெறுவதற்கு இராஜதந்திரமுள்ள துடிப்பான தலைவர்கள் ஈழத்தமிழருக்கு அத்தியாவசியமானதாக மாறியிருக்கிறது. எனவே நாங்கள் தொடர்ந்தும் ஒரு ஏமாற்றப்படும் சமூகமாக இருந்துவிட முடியாது. இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கும் மாவீரர்களுக்கும் இந்த மண்ணில் பெரும் கனவுகளுடைய மாண்ட உறவுகளுக்கும் ஒரு நீதி கிடைக்கவேண்டுமாகவிருந்தால் அவர்களுடைய கனவு-இலட்சியத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தே ஆகவேண்டும். அந்த அங்கீகாரம் என்பது தமிழர்கள் மத்தியில் இருந்து கிளம்பும் சிறந்த தலைவர்களினால் மாத்திரமே உருவாக்க முடியும். ஆகவே இந்த தேர்தலில் புலம்பெயர் உறவுகளும் ஈழத்தமிழர்களும் கூட்டிணைந்து சிறந்த தலைவர்களை மக்களின் தலைவர்களாக தெரிவு செய்ய வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயமுமாகும் என்பதை கூறி வைக்கின்றோம்.
இதேவேளை, உலகமே எதிர்பார்த்திருந்த வல்லரசு நாடான அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் அமர்ந்த டிரம்ப் 2020-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். 2020 தோல்விக்கு பின் மீண்டும் களமிறங்கிய டிரம்ப் இரண்டாவது தடவையாக பதவியில் அமரவிருக்கிறார். உலகம் மிகப் பெரிய போர்களையும் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியையும் சந்தித்துவரும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ட்ரம்பின் முன்னால் பாரிய சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக இஸ்ரேல்-காசா போர், உக்ரைன்-ரஷ்யா போர் என உலகம் மூன்றாம் உலக யுத்தத்தை நெருங்குகிறது என்ற ஒரு சூழ்நிலையில் வல்லரசு நாட்டினுடைய புதிய ஜனாதிபதி இவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறார்? உலக நெருக்கடியாக மாறியிருக்கும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு கையாளப்போகிறார் போன்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. தன்னுடைய வெற்றிக்கு பின்னர் பேசிய ட்ரம்ப், போர்களை தொடங்க மாட்டேன்; நிறுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், நமக்கு வலிமையான, அதிகாரமிக்க ராணுவம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் முதலாவது பதவிக்காலம் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருந்த நிலையில், அவருடைய இரண்டாவது பதவிக்காலம் அமெரிக்காவுக்கும் உலக நாடுகளுக்கும் எவ்வாறானதாக அமையவிருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
“நீதிக்கான குரல்” இதழின் வாயிலாக வாசகர்கள் அனைவருக்கும் எமது வேண்டுகோள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நீதிக்காக போராட முன்வரவேண்டும். மேலும் இந்த இதழை உங்களது நண்பர்கள்;, உறவினர்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று வேண்டுகிறோம்.
ஒன்றிணைந்து! இச்சமூகத்தை மாற்ற நம்மால் இயலும். அடுத்த பதிப்பில் யாம் உங்களை சந்திப்போம், அதுவரை அன்புடன்,
உங்கள்
சதீஸ்சன் குமாரசாமி
தலைமை ஆசிரியர்