ஐ.நா. பிரேரணையின் வீரியத்தை அரசு பேரம்பேசி குறைக்க முயற்சி: சுமந்திரன் விசனம்
பிரேரணையில் சொற்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பினும், அதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என இணையனுசரணை நாடுகள் கூறினாலும், அதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோரமாட்டோம் எனக்கூறி, அப்பிரேரணையின் உள்ளடக்கத்தை வலுவிழக்கச்செய்து, அதன் வீரியத்தைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை, 06-10-2025 பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை பெரிதும் வலுவானதாக அமையவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பைக் கோரமாட்டோம் எனக்கூறி, அப்பிரேரணையின் உள்ளடக்கத்தை வலுவிழக்கச்செய்து, அதன் வீரியத்தைக் குறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டார்.
அத்தோடு பிரேரணையில் சொற்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பினும், அதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என இணையனுசரணை நாடுகள் கூறினாலும், அதனைத் தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் எவ்வாறெனினும் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டியது அவசியம் என்றும், அதனூடாகவே பேரவையினதும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினதும் இலங்கை மீதான கண்காணிப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.





