பொருளாதார முகாமைத்துவம் மீதான நம்பிக்கை குறைவடைவதால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் - ஹர்ஷ டி சில்வா
வெளிநாடுகளில் வாழும் சில இலங்கையர்கள் ரூபாய் மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் பணப் பரிமாற்றங்களை தாமதப்படுத்துகின்றனர்,
அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மீதான நம்பிக்கை குறைவடைவதால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். நிதி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
டொலரின் பெறுமதி உயர்வு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்க டொலரின் மதிப்பு சுமார் 342 ரூபாவாக உயர்ந்துள்ள நிலையில் கறுப்புச் இந்த விகிதம் 345 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. நாணயச் சந்தைகள் பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. ரூபாயின் மதிப்பை முகாமைத்துவம் செய்வதற்கான அரசாங்கத்தின் திறன் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கிறது.
வட்டி வீதங்களை அதிகரிப்பது உள்ளிட்ட அண்மைகால நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணத்தையே வழங்கியுள்ளது. அதன் பின்னர் ரூபாய் மீண்டும் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது. புதிய கட்டுப்பாடுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் பற்றுப் பத்தரங்களை இறக்குமதியாளர்கள் செலுத்தத் தொடங்கியுள்ளதால், வெளிநாட்டு நாணயத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் சில இலங்கையர்கள் ரூபாய் மேலும் வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பில் பணப் பரிமாற்றங்களை தாமதப்படுத்துகின்றனர், அதே நேரத்தில் சில ஏற்றுமதியாளர்களும் தமது ஏற்றுமதி வருவாயை நாட்டிற்கு கொண்டு வராமல் தாமதப்படுத்துகிறார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளினால் நாணயத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். ஸ்திரத்தன்மையை பேணுவதில் சந்தை நம்பிக்கை என்பது ஒரு முக்கியமான காரணியாகும். ஆகவே நிதி விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். நிதியமைச்சரான ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் தரப்பினர் சிறந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.





