இந்திய சபாநாயகருடன் சஜித் சந்திப்பு
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாராளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை - இந்தியாவுக்கிடையில் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற செயல்முறை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டில்லியில் 05-11-2025 அன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குறிப்பாக நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்றத்தினுள் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பாக இருவருக்குமிடையில் பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை பாராளுமன்றத்திற்கும் இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாராளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மக்களவை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள புதிய சபாநாயகர் அலுவலகத்தைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைக்கப்பட்டார்.
இங்கு, அதிநவீன வசதிகளையும், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, காகிதமில்லா பாராளுமன்ற இயக்க முறைமைக் கட்டமைப்பு, நவீனமயமான சட்டமன்ற நிர்வாகம், செயல்திறன் தொடர்பான மாதிரியையும் இதன்போது எதிர்க்கட்சி தலைவர் அவதானித்துள்ளார்.





