சுற்றுலா சென்ற பஸ் எல்லவில் விபத்து: 15பேர் பலி
விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்காலை, ஹக்வன, கொடிகமுவ, கெட்டமான்ன உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தசர்களாவர்.
தங்காலையிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற தனியார் பேரூந்தொன்று 04-09-2025 அன்று நள்ளிரவில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதியில் வெல்லவாய நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த ஜூப் மற்றும் வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
தங்காலை நகரசபை செயலாளர் உள்ளிட்ட நகரசபை உத்தியோகத்தர்கள் 12 பேருடன் 33 பேர் விபத்து இடம்பெற்ற போது குறித்த பேரூந்தில் பயணித்துள்ளனர். இதன் போது சாரதி உள்ளிட்ட 6 ஆண்களும், 9 பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தங்காலை நகரசபை செயலாளர் டீ.டபிள்யு.ஏ.ரூபசேன உள்ளிட்ட 12 பேர் குறித்த நகரசபையின் உத்தியோகத்தர்களாவர்.
எஞ்சிய மூவரில் பேரூந்து சாரதியும், இரு சிறுவர்களுமாவர். மேலும் காயமடைந்த 6 ஆண்களும், 5 பெண்களும், 3 சிறுவர்களும், 2 சிறுமிகளும் பதுளை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்காலை, ஹக்வன, கொடிகமுவ, கெட்டமான்ன உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தசர்களாவர். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தனியார் பேரூந்தில் சுற்றுலா சென்று திரும்பிய போதே அவர்கள் இவ்வாறு அனர்த்த்தை எதிர்கொண்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்துக்கு செல்வது மிகக் கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், இராணுவத்தினர், பிரதேச மக்கள், வைத்தியர்கள், பொலிஸ், விமானப்படை ஆகியோரால் பாதிக்கப்பட்டோர் துரிதமாக மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு சுமார் 20க்கும் அதிகமான அம்புலன்ஸ் வண்டிகள் பதுளை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழுவுடன் வருகை தந்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவியளிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பதுளை வைத்தியசாலை வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.





