ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் 'தித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உடனடி மற்றும் மனிதாபிமான நிவாரண உதவிகளுக்கென 3 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதியளித்துள்ளது.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்படண வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மிகமோசமான இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளினால் உத்தியோகபூர்வ உதவிக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், அதற்கமைய இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா தெரிவித்துள்ளார்.
"மிக மோசமான வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்டிருக்கும் பாரிய சேதங்கள் குறித்து மிகுந்த கவலையடைகின்றேன். பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கும், நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுக்கும், மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்" எனவும் மஸாட்டோ கன்டா குறிப்பிட்டுள்ளார்.
மிகமோசமான அனர்த்தங்களின் பின்னர் உயிர்காக்கும் உடனடி நிவாரண உதவிகளை வழங்குதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும ஆசிய பசுபிக் அனர்த்த உதவி நிதியத்தின் ஊடாகவே மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.





