அசோக்க ரன்வலவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
இவ்விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தாய், 55 வயதுடைய பாட்டி மற்றும் 6 மாதக் குழந்தை ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
ஹெய்யன்துடுவ, தெனிமுல்ல பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக்க ரன்வலவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மஹர மேலதிக நீதிவான் பண்டார இலங்கசிங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க ரன்வல நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்தே அவரை கைது செய்து மன்றுக்கு ஆஜர்படுத்துமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்தார். அன்றைய தினம் சபுகஸ்கந்த பொலிஸாரினால் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
அசோக்க ரன்வலவுக்கு எதிராக விபத்தைத் தவிர்க்காமை, கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தியமை, பயணிகளுக்குப் பாரதூரமான மற்றும் சாதாரண காயங்களை ஏற்படுத்தியமை , போக்குவரத்துக்குப் பொருத்தமற்ற நிலையில் இருந்த வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
கடந்த வருடம் டிசம்பர் 11 ஆம் திகதி இரவு 7.45 மணியளவில், அசோக்க ரன்வல பயணித்த ஜீப் வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதுடன், எதிரே வந்த கார் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய தாய், 55 வயதுடைய பாட்டி மற்றும் 6 மாதக் குழந்தை ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
இச்சம்பவம்தொடர்பாக நீதிமன்றத்தால் அசோக்க ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்ததுடன், அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





