அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை
பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரித்து வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற) முற்பணமாக 10,000 ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு.
குறித்த முற்பணம் வட்டியின்றி 08 மாதத் தவணைகளாக அல்லது அதற்கு முன்னரோ அறவிடுவதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அப்பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரித்து வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்கொடுபணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தாபன விதிக்கோவையின் உரிய ஏற்பாட்டை திருத்தம் செய்வதற்கும், அதுதொடர்பாக சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளிவிடுவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





