பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவை சவாலுக்கு உட்படுத்த தயார்: எம்.ஏ.சுமந்திரன்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றதே தவிர, பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படும் என்று கூறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு சட்டமாக்கப்படும் பட்சத்தில், அது பொதுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு, குறிப்பாக சமூகவலைத்தளங்கள் ஊடாக நிகழும் கருத்தாடல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யாமல், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்தவாறு அதனை முற்றாக நீக்குவதற்குரிய தொடர் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்கவிருப்பதாகவும், இச்சட்டவரைவு அடுத்த கட்டத்துக்கு நகரும் பட்சத்தில், அவசியமேற்படின் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்னன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தியும், அச்சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் கையெழுத்துப்போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் வகையில் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பவற்றின் உள்ளடக்கங்களை விடவும் மோசமான விடயங்கள் இப்புதிய வரைவில் உள்வாங்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கு விசேட சட்டமொன்று தேவையில்லை எனத் தெரிவித்துள்ள சுமந்திரன், அவசியமேற்படும் பட்சத்தில் ஜனாதிபதியினால் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த முடியும் என்றும், அதன்கீழ் அவசியமான சட்டங்கள், வழிகாட்டல்களை இயற்றமுடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கின்றதே தவிர, பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யப்படும் என்று கூறப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 'இப்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவரைவு சட்டமாக்கப்படும் பட்சத்தில், அது நாட்டுமக்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். குறிப்பாக சமூகவலைத்தளங்கள் ஊடாக இடம்பெறும் கருத்தாடல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான மிகமோசமான சரத்துக்கள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இது வெறும் வரைவு மாத்திரமே என்பதால், இப்போது நீதினமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை' என்றும் சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.
மேலும் இவ்வரைவை இரத்துச்செய்வதற்கும், பயங்கரவாத தடை சட்டம் பதிலீடின்றி முற்றாக நீக்கப்படுவதற்கும் அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்துக்குத் தொடர்ந்து வழங்கவிருப்பதாகவும், அதற்கு அப்பாலும் இவ்வரைவு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பட்சத்தில், அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





