பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண தலைமையிலான குழு ஜப்பான் விஜயம்
இந்த சந்திப்பு, இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்தது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான உயர்மட்ட பாதுகாப்பு தூதுக்குழு, ஜப்பான் - இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தைத் மேற்கொண்டிருந்தது.
இந்த முக்கிய நிகழ்வு, குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கிடையேயான நீண்டநாள் நட்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
ஜப்பானுக்கான இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை தூதுக்குழு பல உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளை நடத்தியது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஜப்பானின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருடனான சந்திப்பின் போது பாதுகாப்பு சீர்திருத்தங்களுக்கான அரசின் அணுகுமுறையை விளக்கினார். தேசிய பாதுகாப்பு முன்னுரிமைகளை பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஒத்திசைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சியை மேம்படுத்துதல், ஊழலை ஒழித்தல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை பேணுதல் போன்ற இலங்கை அரசின் உறுதிப்பாட்டை ஜப்பான் இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.
மேலும், நீண்டகாலமாக பின்பற்றப்பட்ட அணிசேரா கொள்கையையும் அவர் குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் ஜப்பான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இயக்குநர் நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜப்பானின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சர்வதேச விவகாரங்களுக்கான துணை பாதுகாப்பு அமைச்சர மற்றும் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்பு படையின் பிரதம அதிகாரி ஆகியோருடன் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த சந்திப்பு, இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தளமாக அமைந்தது. இந்த பயனுள்ள கலந்துரையாடல்கள், உயர்மட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
கடல்மூலம் நடைபெறும் பன்னாட்டு குற்றங்களை தடுக்கும் கூட்டு முயற்சிகள், பாதுகாப்பு இராஜதந்திரத்தின் மூலம் உருவான நீடித்த நட்பு, பண்பாட்டு பரிமாற்றங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டம் ஆகியவை பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கை கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.





