நிலக்கரி இறக்குமதி நிதி மோசடி தொடர்பில் சி.ஐ.டியில் முறைப்பாடு
அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால் மாத்திரமே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எஞ்சிய நம்பிக்கையாவது பாதுகாப்பக்கப்படும்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 09-04-2026 அன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ உள்ளிட்ட குழுவினரால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த நிலக்கரி மோசடி தொடர்பில் இரண்டாவது தடவையாகவும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தரமற்ற மருந்து கொள்வனவு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அன்றைய தினம் வெறும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான நிதி மோசடி தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அரசாங்க கணக்காய்வாளர் நாயகத்தினால் 2026 ஏப்ரல் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள விசேட கணக்காய்வு அறிக்கையின்படி இந்த நிலக்கரி மோசடியினால் ஏற்பட்டுள்ள குறைந்தபட்ச நட்டம் இரண்டாயிரம் இலட்சம் ரூபாவாகும்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் மருந்து மோசடியைப் போன்றே இந்த நிலக்கரி கொள்வனவுக்கான ஒப்பந்தமும் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது அதிகாரிகளின் கைப்பிழையோ அல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு சதி என்பது கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் தெளிவாகின்றது. கொள்வனவு நடைமுறையின் ஆரம்பம் முதல் நிதி செலுத்துதல் வரை இந்த சதி எவ்வாறு இடம்பெற்றது என்பதை கணக்காய்வாளர் நாயகம் விளக்கியுள்ளார்.
எனவே குறித்த நிறுவனத்திடம் இருந்து நட்டத்தை அறவிடுவதோடு மாத்திரம் இந்த விடயத்தை மூடிமறைக்க ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சரவைக்கோ முடியாது. அன்று கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதேபோன்று இந்த நிலக்கரி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சரவையை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்து விசாரணை செய்ய வேண்டும்.
அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால் மாத்திரமே அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எஞ்சிய நம்பிக்கையாவது பாதுகாப்பக்கப்படும். ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் இணைந்து மேல் நீதிமன்றத்திலோ அல்லது நீதவான் நீதிமன்றத்திலோ வழக்குகளை தாக்கல் செய்து பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சரவைக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நட்டத்தை மக்களிடம் இருந்து வசூலிக்கப் போவதில்லை என பாராளுமன்றத்தில் கூறப்பட்டாலும் இறுதியாக வரிச்சுமை மூலம் மக்களே இதனை சுமக்க வேண்டியுள்ளது. இந்த மோசடி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.





