சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்து மாகாணசபைத்தேர்தலை நடத்துங்கள் - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழர் தரப்பு கூறிவருவதைப் போன்று பழைய தேர்தல் முறையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டமா அதிபர் திணைக்களமும் பரிந்துரையை முன்வைத்துள்ளது.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள சிக்கல்களைக் நிவர்த்தி செய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சுரேந்திரனால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தை இரத்துச்செய்து 1988 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இருந்த முன்னைய தேர்தல் முறைமைக்குத் திரும்புவதன் ஊடாக மாகாணசபைத்தேர்தலை விரைவாக நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இருப்பினும் அரசாங்கம் அந்தப் பரிந்துரையைக் கருத்திற்கொள்ளாமல், புதிய திருத்தச்சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்றும், அதில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக ஒதுக்கீடுகளை செய்வது பற்றிய புதிய திருத்தச் சட்டத்தை எப்படிக் கொண்டுவருவது என்பது பற்றி ஆலோசிக்கவேண்டும் எனக் கூறுவது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும்.
ஏற்கனவே தமிழர் தரப்பு கூறிவருவதைப் போன்று பழைய தேர்தல் முறையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டமா அதிபர் திணைக்களமும் பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதனைக் கருத்திற்கொள்ளாது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஏனைய பரிந்துரைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்வதானது மாகாணசபைத்தேல்தல்களைப் பிற்போடுவதற்கான முயற்சியாகவே அமையும்.
2017 ஆம் ஆண்டின் மாகாணசபைத்தேர்தல் திருத்தச் சட்டத்தின் 17 ஆவது சரத்தை இரத்துச்செய்து, 1988 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரகாரம் முன்னைய தேர்தல் முறைமைக்குத் திரும்புதல் மற்றும் 2017 ஆம் ஆண்டு திருத்தம் நடைமுறையில் இருந்த போதிலும், முன்னைய தேர்தல் தேர்தல் சட்டத்தை மீண்டும் நிகழ்கால அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டுவரல் என்பன சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகளில் ஒன்றாக இருந்தது.
மாகாணசபைத்தேர்தல் சட்டத்தின் 3ஏ(14) பிரிவின் கீழ் எல்லை நிர்ணயக்குழு தனது அறிக்கையை உரிய காலத்துக்குள் சமர்ப்பிக்கத் தவறியமையினால், தற்போது நடைமுறையில் இருக்கும் 2017 ஆம் ஆண்டு திருத்தத்தை முழுமையான அமல்படுத்தமுடியாது என சட்டமா அதிபர் கூறியது ஏற்கனவே தெரிந்த விடயமாகும். எனவே அதனை இரத்துச்செய்வதன் மூலம் பழைய முறையில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்தமுடியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





