ஹர்ஷன லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கடிதம்
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடாகும்.
சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் இந்த செயற்பாடு குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாட்டு தகவல்களை எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பாராளுமன்ற முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணிக்குழாம் பிரதானியாக பதவி வகித்த சமிந்த குலரத்ன, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன மற்ம் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமிர கால்லகே ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றத்துக்கு அமைய 2026.02.02 ஆம் திகதியன்று லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.அதேபோல் இந்த முறைப்பாடு குறித்து பூரணமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. சபாநாயகருக்கும், அவரது தனிப்பட்ட செயலாளருக்கு எதிராகவும் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் சமீர கால்லகே, குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குரிய தகவல்களை சபாநாயகருக்கு அறிக்கையிடுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1 ஆவது பந்தியின் 3(5) பிரிவு, 125 மற்றும் 127 ஆகிய பிரிவுகளுக்கமைய ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் அறிக்கை கோருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆணைக்குழுவின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விசாரணை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படும் நிலை ஏற்படும் என்று கருதுகிறோம்.அதற்கமைய, 2026.02.06 ஆம் திகதியன்று சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த கடிதத்தை பாராளுமன்றத்துக்கு சபைப்படுத்தியுள்ளேன்.
(அந்த கடிதத்தை இந்த கடித்ததுடன் இணைத்துள்ளேன்).
சபாநாயகர் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் குறித்து முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அந்த முறைப்பாடுகளுக்கு உரிய சாட்சிகளை மறைப்பதற்கும், மாற்றுவதற்கும் அல்லது சாட்சியாளர்களை அச்சுறுத்துவதற்கும் முயற்சிக்கப்படும் என்பது சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் செயற்பாடுகள் ஊடாக விளங்கிக்கொள்ள முடிகிறது.
சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்த தகவல் கோரல் கடிதம் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் சபாநாயகருக்கு எதிரான முறைப்பாடு தகவல் தொடர்பில் எக்காரணிகளுக்காகவும் வெளியாட்களுக்கோ அல்லது பிறிதொரு தரப்பினருக்கோ வழங்க வேண்டாம் என்று அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





