உலக சந்தையை இலக்காகக் கொண்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் - அமைச்சர் அனில் ஜயந்த
இலங்கையின் ஏற்றுமதி துறை 1990 களில் இருந்த அதே நிலையிலேயே தற்போதும் காணப்படுவதுடன், இதில் போதிய பல்வகைப்படுத்தல் ஏற்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் 2025 இல் 5 சதவீத வளர்ச்சியை எட்ட உதவியுள்ள நிலையில், இந்த நீண்டகால பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஏற்றுமதித் துறையின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது தொழில் அமைச்சர் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் 17-06-2026அன்று நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 – 2030 உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026-2030 ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் நிலையில், நாடு தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை நடவடிக்கைகள் 2025 இல் 5 சதவீத வளர்ச்சியை எட்ட உதவியுள்ள நிலையில், இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஏற்றுமதித் துறையின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கையின் ஏற்றுமதி துறை 1990 களில் இருந்த அதே நிலையிலேயே தற்போதும் காணப்படுவதுடன், இதில் போதிய பல்வகைப்படுத்தல் ஏற்படவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதனை மாற்றியமைக்க, புதிய திட்டத்தின் கீழ் தயாரிப்பு மற்றும் சந்தை ரீதியான பல்வகைப்படுத்தல் முக்கிய உத்திகளாக முன்மொழியப்பட்டுள்ளதுடன், குறிப்பாக, தொழிநுட்பம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி ஆகியவற்றுடன் இலங்கையை இணைப்பதன் மூலம் உலக வர்த்தகத்தில் நிலையான இடத்தைப் பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் மிகப்பெரிய பலம் மனித வளமே ஆகும் என்பதால், இயற்கை வளங்களை விட மக்களின் திறமை மற்றும் அறிவாற்றல் மூலம் சர்வதேச சந்தையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்க முடியும் என அரசாங்கம் நம்புவதுடன், இதற்கேற்ப கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், உற்பத்திச் செலவைக் குறைக்கவும், வினைத்திறனை அதிகரிக்கவும் டிஜிட்டல் மயமாக்கல் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஏற்றுமதித் துறையில் அமைதியான மற்றும் இலகுவான பணிச்சூழலை உருவாக்க பழைய தொழிலாளர் சட்டங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன. சர்வதேச தரங்களுக்கு அமைய, முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் இணக்கப்பாட்டுடன் புதிய சட்டமூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது ஒரு அமைதியான உற்பத்தி சூழலை உருவாக்கி உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது. இந்த ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் வெறும் எண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்லாமல், மாறாக அதன் பலன்கள் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இறக்குமதியுடன் சமநிலைப்படும் வகையிலான ஒரு வலுவான ஏற்றுமதி நிலையை நாடளாவிய ரீதியில் உருவாக்குவதே இதன் இறுதி இலக்காகும் என்றார்.





