நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய, விசேட நீதிமன்றங்கள்: அமைச்சர் ஹர்ஷன
வழக்கு விசாரணைகளை முடிவுறுத்துவதில் நிலவும் தாமதத்துக்குப் பிரதான காரணமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக அவ்வெற்றிடங்களை நிரப்பமுடியாவிட்டாலும், அதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கும், அவற்றைக் காலதாமதமின்றி முடிவுறுத்துவதற்கும் வழக்குகளின் தேவைப்பாட்டுக்கு அமைவாக புதிய மற்றும் விசேட நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 19.02.2026அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, வழக்கு விசாரணை செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதை இலக்காகக்கொண்டு நீதியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலாவதாக இரசாயணப் பகுப்பாய்வு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நிபுணத்துவத்தும் வாய்ந்த போதிய நிபுணர்கள் இன்மை மற்றும் கடந்த அரசாங்கத்தினால் அவ்வெற்றிடங்கள் நிரப்பப்படாமை என்பன வழக்கு விசாரணைகளை முடிவுறுத்துவதில் நிலவும் தாமதத்துக்குப் பிரதான காரணமாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக அவ்வெற்றிடங்களை நிரப்பமுடியாவிட்டாலும், அதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் சகல பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்க்கமுடியாவிடினும், வழக்குகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை விரிவாக முடிவுறுத்துவதற்கென புதிய மற்றும் விசேட நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், அதற்கு உதாரணமாக உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மற்றும் ஊழல் மோசடி வழக்குகள் தொடர்பான சிறப்பு விசாரணை என்பவற்றைக் குறிப்பிட்டார்.
மேலும் இந்நீதிமன்றங்களில் எந்தெந்த வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பது குறித்து பிரதம நீதியரசரினாலேயே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும், இருப்பினும் இக்கட்டமைப்புக்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் கீழ் சுயாதீனமாக இயங்கும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெளிவுபடுத்தினார்.





