அமெரிக்க - ஈரான் இடைக்கால ஒப்பந்தம் பற்றியதொரு பார்வை
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த ஒப்பந்தம் உலக அமைதிக்கான ஒரு பெருமுயற்சியாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் பல புவிசார் அரசியல் சூழ்ச்சிகளும், உள்நாட்டு அரசியல் தேவைகளும் மறைந்துள்ளன.
மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் இராணுவப் பதற்றங்களின் உச்சகட்டமாக, சர்வதேச சமூகம் நீண்ட நாட்களாக அச்சத்துடன் உற்றுநோக்கிய அமெரிக்க - ஈரான் மோதல் போக்கு, தற்பொழுது முக்கியமான திருப்பத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் தங்களுக்குள் நிலவி வந்த கடுமையான போர்ச்சூழலைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை' எட்டியுள்ளன.
இந்த உடன்படிக்கையானது, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் இதயமாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கும், பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ முற்றுகைகளைத் தளர்த்துவதற்கும் வழிவகை செய்துள்ளது.
இந்த அதிரடி வெளியுறவுக்கொள்கை மாற்றம், உலகப் பொருளாதாரத்திலும், சர்வதேசப் பாதுகாப்பு வியூகங்களிலும் எத்தகைய ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏவுகணைத் தாக்குதல்களும், கப்பல் முற்றுகைகளும் தீவிரமடைந்து வந்தன. இரு நாடுகளும் நேரடிப்போர் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த வேளையில், திடீரென எட்டப்பட்டுள்ள இந்த அமைதி ஒப்பந்தம் உலக நாடுகளுக்கு நிம்மதிப் பெருமூச்சை அளித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், 'ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான ஒப்பந்தம் இப்போது முழுமையடைந்துள்ளது' என்று அறிவித்ததோடு, ஹோர்முஸ் ஜலசந்தியை எவ்வித தடையுமின்றி உடனடியாகத் திறப்பதற்கும், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகைகளை முற்றிலுமாக நீக்குவதற்கும் முழு அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பல்லாண்டுகளாகப் பகைமை பாராட்டி வந்த இரு நாடுகள், தங்களின் கடுமையான கொள்கைப்பிடிப்புகளைத் தளர்த்தி, இந்த இடைக்கால உடன்பாட்டை எட்டியுள்ளமை சர்வதேச இராஜதந்திர வரலாற்றில் மைல்கல்லாகும். இத்தாக்குதல்கள் மற்றும் முற்றுகைகள் காரணமாக உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படவிருந்த மாபெரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பேராபத்துகள் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
உலகிலேயே மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக ஹோர்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இப்பாதை வழியாகவே உலக நாடுகளைச் சென்றடைகிறது.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ஈரானின் தீவிரப் பாதுகாப்புப் பதிலடி நடவடிக்கைகள் காரணமாக இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டிருந்த சூழலில், தற்போதைய ஒப்பந்தத்தின்படி இப்பாதை 'கட்டணங்கள் ஏதுமின்றி' சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதுமே, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மை குறைந்து, உலகப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் உடனடியாக அமுலுக்கு வந்தாலும், சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள் வளைகுடா பிராந்தியத்தில் தங்களின் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகளை முழு வீச்சில் மீட்டெடுப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனப்பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்டகாலப் போர்ச் சூழல் காரணமாகக் கடல் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சங்கள், காப்பீட்டுக் கட்டணங்களின் உயர்வு மற்றும் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விநியோகிப்பதில் உள்ள தொழில்நுட்பத் தாமதங்கள் போன்ற காரணிகளால், சந்தையில் இதன் முழுமையான சாதகமான பலன்கள் வெளிப்படச்சற்று காலம் எடுக்கும்.
தற்போது எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் ஒரு முழுமையான இறுதி உடன்படிக்கை அல்ல, மாறாக இது ஒரு தற்காலிக 'இடைக்கால அமைதி ஒப்பந்தம்' மட்டுமே என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்கள் கால அவகாசத்துடன் கூடிய போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலத்திற்குள், இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் மிகக் கடுமையான மற்றும் சிக்கலான முரண்பாடுகளுக்குத் தீர்வு கண்டு, விரிவான நீண்டகால உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது இரு தரப்பிற்கும் வழங்கப்பட்டுள்ள மிகக்குறுகிய கால அவகாசப் பரீட்சையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த 60 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டிய மிக முக்கியமான சவால் ஈரானின் அணுசக்தித் திட்டமாகும். ஈரான் தற்பொழுது சேமித்து வைத்துள்ள மிக அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளை என்ன செய்வது, அதன் அணு ஆயுதப் பரிசோதனை ஆலைகளின் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு இந்த இரண்டு மாதங்களுக்குள் இராஜதந்திர முறையில் விடை காண வேண்டும்.
கடந்த 2015ஆம் ஆண்டு வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவே பல ஆண்டுகள் சென்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெறும் 60 நாட்களில் இந்த அணுசக்திச் சிக்கலைத் தீர்ப்பது என்பது அமெரிக்க மற்றும் ஈரான் இராஜதந்திரிகளுக்குக் கத்தி மேல் நடப்பதாகவே அமையும்.
இந்த அமெரிக்க - ஈரான் இடைக்கால அமைதி ஒப்பந்தத்தை உலக நாடுகள் பலவும் பரவலாக வரவேற்றுள்ளன. குறிப்பாக, ஐரோப்பியப் பிராந்தியத்தின் வல்லரசுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த ஒப்பந்தத்திற்குத் தங்களின் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ன.
பிராந்திய ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், உலகப் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்த அமைதி ஒப்பந்தம் ஒரு சிறந்த வாய்ப்பு என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன. இந்த ஒப்பந்தம் முறையாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் அறிவித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் இந்த உடனடி ஆதரவு என்பது தங்களின் சொந்தப் பொருளாதாரப் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் ஐயமில்லை. ஈரான் மீதான தடைகள் மற்றும் வளைகுடாப் போர் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கடுமையான எரிசக்தி நெருக்கடியைச் சந்தித்து வந்தன.
தற்போதைய போர் நிறுத்த நகர்வானது, ஐரோப்பாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி உறுதிப்படுத்துவதற்கு உதவும் என்பதால், இந்த இராஜதந்திர நகர்வை அவர்கள் தீவிரமாக ஆதரிக்கின்றனர். மேலும், சுவிட்சர்லாந்தில் ஜூன் 19 அன்று நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கையெழுத்து நிகழ்வில் மீதமுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக உழைக்க முன்வந்துள்ளன.
மேலோட்டமாக பார்க்கும்போது இந்த ஒப்பந்தம் உலக அமைதிக்கான ஒரு பெருமுயற்சியாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் பல புவிசார் அரசியல் சூழ்ச்சிகளும், உள்நாட்டு அரசியல் தேவைகளும் மறைந்துள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தற்போதைய ஜனாதிபதி தனது உள்நாட்டு அரசியலில் முக்கிய ஆதரவைப் பெறுவதற்கும், சர்வதேச அரங்கில் தான் சிறந்த சமாதான தூதுவர் என்பதைக் காட்டுவதற்கும் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்துகிறார். தீவிர இராணுவ மோதல்களால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய இழப்புகளைத் தவிர்ப்பதும், வரவிருக்கும் சவால்களைத் தன்வசப்படுத்துவதும் அமெரிக்காவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கை உத்தியாகும்.





