இடியுடன் கூடிய கனமழையால் பாதிக்கப்பட்ட எட்மன்டனில் சில சாலைகள் மீண்டும் திறப்பு
புயலால் பல போக்குவரத்து சமிக்ஞைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோனர்ஸ் சாலை, 127வது அவென்யூ மற்றும் 107வது அவென்யூ பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் எட்மன்டன் நகரில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், மூடப்பட்டிருந்த சில முக்கிய சாலைகள் மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. எனினும், சில சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
சனிக்கிழமை இரவு பெய்த கனமழைக்குப் பின்னர் யெல்லோஹெட் டிரெயிலுக்கான அணுகல் மீளமைக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வடக்கு நோக்கிய க்ரோட் சாலை மற்றும் ஒயிட்மட் டிரைவின் சில பகுதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன.
"சாலைகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி, மேலும் பல சாலைகளை விரைவாகத் திறக்க எமது பணிக்குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களின் பொறுமைக்கு நன்றி," என எட்மன்டன் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புயலால் பல போக்குவரத்து சமிக்ஞைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோனர்ஸ் சாலை, 127வது அவென்யூ மற்றும் 107வது அவென்யூ பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.45 மணி நிலவரப்படி, நகரின் 14 பகுதிகளில் மின்தடை நீடித்து வருவதாக எப்கோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் பிற்பகலுக்குள் மின்விநியோகம் மீளமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





