சிறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு: நீதியமைச்சர்
சிறு குற்றங்களுக்கு சிறையில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
2024 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் சபாநாயகரால் 2024.05.03ஆம் திகதி சான்றுரைப்படுத்தப்பட்டது. அதற்கமைய அந்தச் சட்டம் அத்தினத்துக்கு பின்னர் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு பொருத்தமானதாக அமையும். நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த நீதி ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளேன். சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 24-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது சபை ஒத்திவைப்பு வேளையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சகல சிறைச்சாலை கட்டமைப்பிலும் காணப்படும் நெரிசலை குறைப்பதற்கு முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைத்த 2024 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை திருத்தத்தில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்ட காலத்தில் இருந்து அவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்படும் காலம் வரை அவர் சிறையில் இருந்த காலத்தை கருத்திற் கொண்டு தண்டனை காலத்தை குறைப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் 2024 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் சிறைச்சாலையில் இருந்தவாறு மேன்முறையீடு செய்யப்பட்டவர்களின் தண்டனைக் காலம் குறைக்கப்படவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படுமா?
விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் தொடர்ந்து விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கைகளை விரைவுப்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
சிறு குற்றங்களுக்காக பொதுமன்னிப்பு வழங்கல் தற்போது நடைமுறையில் இல்லை. இதனை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிறைச்சாலையில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களை நன்னடத்தையை கருத்திற் கொண்டு விடுதலை செய்ய ஏதேனும் வழிமுறைகள் உள்ளதா? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேள்விகளை முன்வைத்தார்.
இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார,
2024 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் சபாநாயகரால் 2024.05.03ஆம் திகதி சான்றுரைப்படுத்தப்பட்டது. அதற்கமைய அந்தச் சட்டம் அத்தினத்துக்கு பின்னர் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு பொருத்தமானதாக அமையும். இதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் பொருட்டு நீதி ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளேன்.
இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் காணப்படும் ஆளணி பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் புதிய நியமனங்கள் வழங்கப்படும்.
சிறு குற்றங்களுக்கு சிறையில் உள்ளவர்களுக்கு எதிர்வரும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும். நீதியமைச்சர் என்ற அடிப்படையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு இவ்விடயம் குறித்து எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளேன். சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பு வழங்கலுக்கான ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
அவ்வப்போது வழங்கப்படும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளுக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் பொதுமன்னிப்பு வழங்கப்படும். 2026.02.04 ஆம் திகதியன்று 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்க நிபந்தனையடிப்பதையில் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றார்.





