உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் சர்வதேச விதிகளுக்கு எதிரானது : ஜி7 நாடுகள் கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 49ஆவது ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜி7 நாட்டுத் தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், 15 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரால் உலகிற்கே பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் அமைதி நிலவ தேவையான, நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அணு ஆயுத பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மீட்டெடுக்கவும், அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.